துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2023 12:11
துாத்துக்குடி: தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில் திருக்கல்யாண தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக மண்டபத்தில் எழுந்தருளிய பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து கைலாய வாத்தியம், மேள தாளங்கள் முழங்க தேரில் எழுந்தருளிய பாகம்பிரியாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தேரோட்டத்திற்கு முன்னதாக தேரடி மாடசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தேர் காலுக்கு சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் பூஜைகள் செய்த பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் லட்சுமிபதி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேருக்கு முன்பாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் நிலையை அடைந்தது.