பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 12:11
செஞ்சி: வேல்கள் திருடு போன பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலுக்கு சுற்று சுவர் கட்டும் பணியை துவங்கி செய்து வருகின்றனர்.
செஞ்சி அடுத்த பெருவளூரில் 1500 ஆண்டுகள் பழமையான கோகிலாம்பாள் உடனுரை கோட்டீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளியே தனி ஷெட்டில் இருந்த 50 கிலோ எடையுள்ள செப்பு வேல் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20க்கும் மேற்பட்ட செப்பு, பித்தளை வேல்கள் கடந்த 7ம் தேதி இரவு திருடு போனது. கடந்த 4ம் தேதி இந்த கோவிலை ஒட்டி இருந்த பள்ளி கட்டடத்தின் சுவற்றை இடித்ததால் வேல்கள் பாதுகாப்பு இன்றி திறந்த வெளியில் இருந்தது. பாதுகாப்பின்றி இருந்ததால் திருட்டு நடந்திருந்தது. மேலும் இந்த கோவிலில் பழமையான சிலைகள் இருப்பதால் இதை பாதுகாக்க உடனே சுற்று சுவர் அமைக்க வேண்டும் என கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், பி.டி.ஓ.,க்களுடன் கலந்து பேசி ஒன்றிய பொது நிதியில் சுற்று சுவர் கட்ட ஏற்பாடு செய்தார். இதன் படி நேற்று சுற்றுவர் கட்டும் பணி துவங்கி நடந்தது. துரித நடவடிக்கை எடுத்து சுற்று சுவர் கட்டியது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.