பதிவு செய்த நாள்
10
நவ
2023
12:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கோயிலில் தங்கிய விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
நவ. 13ல் காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. திருவிழா நடைபெறும் ஆறு நாட்களிலும் மதுரை மற்றும் வெளியூரிலிருந்து வரும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அவர்கள் தினம் காலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் சென்று கோயிலில் தங்குவர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகம் சரவணப் பொய்கை கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளுடன், நடமாடும் கழிப்பறைகளும், தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளது. கழிப்பறைகளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கோயிலில் அனைத்து மண்டபங்களிலும் மெகா டி.வி., க்கள் அமைத்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மற்ற நேரங்களில் சுவாமி திரைப்படங்கள், கோயிலில் நடைபெற்ற திருவிழாக்களின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகிறது. விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மதியம் தேன், தினை மாவு, சர்க்கரை கலந்த பிரசாதமும், மாலையில் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறும், இரவில் பாலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தினமும் சுவாமி புறப்பாடு தவிர்த்த நேரங்களில் பக்தர்களுக்காக பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தினம் மதியம் 1,500 பக்தர்களுக்கு இலவச உணவும் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யும் பணி துவங்கியுள்ளது.