பதிவு செய்த நாள்
13
நவ
2023
04:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கோயிலில் காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜையை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.
சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டபின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு அவர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழ சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும். சூரசம்ஹாரம்: தினம் இரவு 7:00 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 17ல் வேல் வாங்குதல், நவ. 18ல் சூரசம்ஹாரம், நவ. 19 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள் , கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
பக்தர்கள் வேதனை: காப்புகட்டவரும் பக்தர்களிடம் கடந்த ஆண்டு வரை நபர் ஒருவருக்கு காப்புக் கட்டுக்கு ரூ. 5ம், 7 நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்ள ரூ 35, மாவிளக்கு பூஜை செய்வதற்கு ரூ. 10ம் ஆக மொத்தம் ரூ. 50 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மேற்கண்ட கட்டணங்களுடன் சேர்த்து கோயில் தல வரலாறு புத்தகம் ஒன்று கட்டாயமாக கொடுக்கப்பட்டு நபர் ஒன்றுக்கு ரூ. 100 வசூல் செய்யப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் காப்பு கட்டினாலும் 5 புத்தகங்கள் கட்டாயமாக வழங்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் பல உறுப்பினர்கள் காப்பு கட்டும் பொழுது அத்தனை புத்தகங்களையும் என்ன செய்வது. தவிர காப்பு கட்டுவதற்காக கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்தனர். அவர்களில் பலர் எழுத படிக்க தெரியாதவர்களும் அடங்குவர். அவர்களுக்கும் கட்டாயமாக புத்தகம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.