கார்த்திகை 1; வீட்டில் விளக்கேற்றுங்க.. விடியல் பிறக்கும்.. ஐயப்பனை வணங்க அனைத்தும் நடக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2023 10:11
கங்கை போல் புனித நதி இல்லை.. கார்த்திகை போல் புனித மாதமில்லை என்பர். இன்று முதல் மாதம் முழுதும் வீட்டில் விளக்கேற்றி வழிபட தடை நீங்கும். சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கும் நாள். இஷ்ட தெய்வங்களை வணங்கி குருசாமி முன்னிலையில் மாலை அணிவது சிறப்பு. கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால், இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமி கடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும். கார்த்திகை புராணத்தைக் கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதத்தில் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சோம வாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். கார்த்திகை தீபத்தின் வெளிச்சத்தில் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்!