சபரிமலையில் பக்தர்களுக்கு பாம்பு கடி பிரச்சனை : கூடுதல் ஊழியர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 05:11
சபரிமலை: நடப்பு மண்டல கால சீசன் தொடங்கிய பின்னர் பக்தர்களை தொடர்ந்து பாம்பு கடிப்பதால் தேவசம்போர்டு மற்றும் வனத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்படி வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் மண்டல கால சீசன் தொடங்கும் போது வனத்துறை சார்பில் பாம்பு பிடிக்கும் வீரர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளை பிடித்து காடுகளுக்குள் கொண்டு விடுவது வழக்கம். இந்த ஆண்டு இதற்காக இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுஅவர்களும் தகவல் கிடைத்த இடங்களில் இருந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மர கூட்டம் பகுதியில் மலை ஏறிக்கொண்டு இருந்த பக்தர்கள் இரண்டு பேரை அடுத்தடுத்த நாட்களில் பாம்பு கடித்தது. இதில் ஒரு ஆறு வயது குழந்தையும் அடங்கும்.இருவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர். இந்நிலையில் கேரள தேவசம்போர்டு மற்றும் வனத்துறை அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதின் பேரில் வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் கூடுதல் பாம்பு பிடி நிபுணர்களை நியமிக்கவும் முடிவு செய்தனர். இதன்படி கூடுதல் ஊழியர்கள் இன்று பம்பை மற்றும் சன்னிதானம் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் நடத்தினார் நேற்று 69 ஆயிரத்து 741 பேர் ஆன்லைன் முன்பதிவு செய்தனர்பெரும்பாலானோரும் நேற்றைய தரிசனம் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.