சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது. இங்குள்ள சிவபெருமானை கிளி முகம் கொண்ட முனிவர் வழிபாடு செய்ததால் இவருக்கு சுகவனேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. இக்கோயிலில் உள்ள அம்பிகையின் திருநாமம் சுவர்ணாம்பிகை. இங்குள்ள விகடச்சக்கர விநாயகருக்கு சதுர்த்தி தோறும் அர்ச்சனை செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் நீங்கும். இக்கோயிலில் ராகு, செவ்வாய் இருவரும் நவக்கிரக மண்டலத்தில் இடமாறியுள்ளனர். இவர்களை வழிபட நல்ல வரனும், உத்தியோகமும் கைகூடும். இச்சன்னதியின் மேல்தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லியால் ஏற்படும் தோஷமும் நிவர்த்தி பெறும்.
இக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் இரட்டை விநாயகர் சன்னதியின் பின், ஐயப்பன் என்னும் சாஸ்தா யானை பீடத்தின் மேல் ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் அருள் செய்கிறார். இவரை வணங்குவதால் வாதம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் உபாதை நீங்கும். இவருக்கு செய்யப்பட்ட பாலாபிஷேக தீர்த்தம் நரம்பு தொடர்புடைய பிரச்னைகளுக்கு அருமருந்து. தர்ம சாஸ்தாவான இவருடைய சன்னதியின் முன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மார்கழி மாதங்களில் செல்கிறார்கள்.
சேலம் : பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ, நேரம் : காலை 6:00 – 1:00 மணி மாலை 4:00 – 9:00 மணி தொடர்புக்கு: 0427 2450954