பதிவு செய்த நாள்
27
நவ
2023
01:11
வடபழனி: வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், பரணி - கார்த்திகை நாளான நேற்று முன்தினம் பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன. அவற்றில், 108 விளக்குகள் வள்ளி, தேவசேனா சுப்ரமணியர் சன்னிதியில் பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக ஏற்றப்பட்டன. அத்துடன், 8,001 மின் விளக்குகளால் கோவில் வளாகம் பிரகாசித்தது. கார்த்திகை மகா தீபத் திருநாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6:30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவரும் முருகப் பெருமானும் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மதியம் 12:00 மணிக்கு உச்சி காலத்தில், வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டது. பின், மாலை 5:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு கார்த்திகை பூஜை நடந்தது. மூலவர் சன்னிதி சுற்றும்பிரகாரத்தில், 112 குத்து விளக்குகளும், மூலவர் சன்னிதி உட்பிரகாரத்தில் 30 குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன. இதனால், கோவில் வளாகம் முழுதும் தீப ஒளியாக காட்சியளித்தது. மேலும், 27 நட்சத்திரங்களை பிரதிபலிக்கும் விதமாக, கொடி மரம் அருகே, 27 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நான்கு கோபுரங்கள், எட்டு சன்னிதிகளில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து 8:30 மணிக்கு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
காரணீஸ்வரர் கோவில்; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் மாலை 6:00 மணிக்கு 9 அகல் விளக்குகள் மூலவர் சன்னிதியில் பூஜை செய்யப்பட்டு, ராஜகோபுரம் உட்பட எட்டு விமானத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. குன்றத்துார் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5,008 அகல் தீபங்கள் ஏற்றப்பட்டன. மாலை 6:00 மணிக்கு, 12 அடி உயர கல் துாண் மீது அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றிய பின் கன மழை பெய்தும், தீபம் எரிந்து கொண்டே இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், திருவான்மியூர் மருதீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப வழிபாட்டிற்காக கூடிய பக்தர்கள், சொக்கப்பனை கொளுத்தியதில், இறைவன் ஜோதி தரிசனம் தந்ததாக கருதி, அண்ணாமலைக்கு அரோகரா... அரோகரா... என முழக்கமிட்டனர்.