பதிவு செய்த நாள்
27
நவ
2023
06:11
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கையாழ்வார் வைபவம் சிறப்பாக நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவஸ்தாரங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக, திருமங்கையாழ்வார் அவதரித்தார் என கூறப்படுகிறது. இன்று காலை மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம், கால சந்தி பூஜை நடந்தது. உற்சவர் திருமங்கையாழ்வார், இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு விஸ்வக்சேனர் பூஜை, புண்யாவசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. வெள்ளி சப்பரத்தில் ரங்க மண்டபத்தில், பெருமாள் முன்பு திருமங்கையாழ்வார் எழுந்தருளினார். இவருக்கு சுவாமி பெருமாளிடம் இருந்து, மாலை, சடாரி மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்த சேவை செய்தனர். பின்னர் திருமங்கையாழ்வார் கோவில் வளாகத்தில் வலம் வந்து வந்தார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சற்று முறை, மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.