பதிவு செய்த நாள்
28
நவ
2023
02:11
மதுரை: தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் பிரசாதம் தயாரிக்க எலி எச்சம், வண்டுகள் கலந்த அரிசி, காலாவதியான நெய் வினியோகிக்கப்பட்டுள்ளன. உணவு தயாரிக்க உணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெறவில்லை என வழக்கறிஞர்கள்ஆய்வறிக்கை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றாலம் கதிர்வேல் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஏலத்தின்அடிப்படையில் தற்காலிக கடைகள் நடத்துகிறோம். ஆக.,25ல் தீ விபத்தில் என் கடை உட்பட சில கடைகள் சேதமடைந்தன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கவனக்குறைவால் சம்பவம் நடந்தது. கடைகள் ஒதுக்கீடு ஏலத்தில் விதிமுறைகளை பின்பற்றவில்லை. தீ விபத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இழப்பீடு வழங்கவில்லை. எங்களின் உரிமத்திற்குரிய கால அவகாசம் முடிவடையாத நிலையில் மூன்றாம் நபர்களுக்கு தற்காலிக கடைகள் ஒதுக்கீடு செய்ய ஏல அறிவிப்பை கோவில் செயல் அலுவலர் வெளியிட்டார். தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில்கூறியுள்ளார்.
மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஏற்கனவே விசாரித்த தனிநீதிபதி, ‘ஏலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா, வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார். நீதிபதி பி.புகழேந்தி நேற்று விசாரித்தார்.
இரு வழக்கறிஞர்கள் தாக்கல்செய்த அறிக்கை: தற்காலிக கடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். காஸ்சிலிண்டரால் விபத்து ஏற்பட்டதால் அதற்குரி இழப்பீட்டை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெறலாம். கடைகளில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இடம்பெறக்கூடாது என கோவில் நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. தீ விபத்துக்கு கோவில் நிர்வாகம் மற்றும் கடைக்காரர்களின் கவனக்குறைவே காரணம்.இரு தரப்பினரிடமிருந்தும் தொகையை வசூலித்து சேதமடைந்த கோவில் சுவரை புனரமைக்க வேண்டும். தெற்குபுறம் சன்னதியை சுற்றிலும் கடைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது. கட்டளை மடம் அருகே தற்காலிக கடைகள்அமைக்கலாம். கோவில் மடப்பள்ளியில் பூனைகள் வசிக்கின்றன. பிரசாதம் தயாரிக்க எலி எச்சம், வண்டுகள் கலந்த அரிசி, காலாவதியான நெய் வினியோகிக்கப்பட்டது தொடர்பாக கோவில் செயல் அலுவலருக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன் அடிப்படையில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவிலில் உணவ தயாரிக்க, உணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெறவில்லை. கோவில் மேற்கூரை பழுதடைந்து மழையின் போது நீர் கசிவு ஏற்படுகிறது. கோவில் வருமானத்திலிருந்து 20 சதவீத தொகையை புனரமைப்பதற்கு பயன்படுத் தவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பல மாநில சுற்றுலா பயணியர் வருவதால் கோவில் பற்றிய தகவல்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். அருவி அருகிலுள்ள தர்ப்பணமண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி,‘அறநிலையத்துறை கமிஷனர் நாளை (29ம்தேதி) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தர விட்டார்.