தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தின் அருகே உள்ளது நெட்டூர் கிராமம். பொதிகைமலையில் இருந்து பாயும் துணையாறுகளில் ஒன்றான சித்ராநதி இங்கு ஓடுகிறது. இந்நதிக்கரையில் மாணிக்கமுடைய அய்யனார் என்ற பெயரில் சாஸ்தா அருள் பாலிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த அந்தணர்கள் விவசாயத்திற்காக கிணறு தோண்டினார்கள். அதில் நவரத்தினங்களுள் ஒன்றான மாணிக்கத்துடன், சாஸ்தா விக்கிரகம் ஒன்று கிடைத்துள்ளது. 18 ஆயுதங்களின் ஒன்றான வேல் ஏந்தி காட்சி தருகிறார். பூரணை புஷ்கலையுடன் ஒரே கல்லில் செதுக்கிய செங்கோண பீடத்தில் மாணிக்கமுடையாரை பிரதிஷ்டை செய்துள்ளனர். கர்ப்பக்கிரகத்திற்குள் பலி பீட ரூபத்தில் பூதநாதர் வடகிழக்கு திசையில் உள்ளார். மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் குலதெய்வ வழிபாட்டாளர்கள் ஒன்றிணைந்து இவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட திருவாபரணத்தை அணிவித்து வழிபடுகின்றனர். அரசு செயல்களில் வெற்றி பெறவும், ஆளுமையில் சிறந்து விளங்கவும் இப்பகுதியில் இந்த மாணிக்கமுடையார் சாஸ்தா கண்கண்ட தெய்வம்.
எப்படி செல்வது: தென்காசி – ஆலங்குளத்தில் இருந்து 5 கி.மீ., நேரம்: காலை 9:00 -– 12:00 மணி மாலை 6:00 – 7:00 மணி தொடர்புக்கு: 94421 12992, 99031 09006