பதிவு செய்த நாள்
02
டிச
2023
03:12
அன்னூர்: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஒத்திவைக்கப்பட்ட கும்பாபிஷேகத்தை வரும் 14ம் தேதி நடத்தி கொள்ள அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முன் மண்டபம், 12 ஆழ்வார்கள் சன்னதி, தோரண வாயில், உட்பிரகாரம் அகலப்படுத்துதல் ஆகிய திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. டிச. 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறி இந்து சமய அறநிலைத்துறை டிச. 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்தது. கும்பாபிஷேகம் நடத்த ஆந்திராவில் இருந்து வந்த 40 வேத விற்பன்னர்கள் 29 ம் தேதி மாலை திருப்பி அனுப்பப்பட்டனர். முளைப்பாரி ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட முளைப்பாரிகள் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டன. பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இணை ஆணையர் ரமேஷ் திருப்பணி கமிட்டியின் கோரிக்கையை ஏற்று வருகிற 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் பிறப்பித்துள்ள உத்தரவு : கும்பாபிஷேக விழாவிற்கு நன்கொடை சீட்டு அச்சடித்து பொதுமக்களிடம் வசூல் செய்யக்கூடாது என்னும் நிபந்தனையின் பேரில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. திருக்கோவில் நிதியிலிருந்து செலவு செய்யக்கூடாது. கும்பாபிஷேகம் செய்விப்பதால் கட்டளைதாரர்கள், முன்னுரிமை எதுவும் கோரக்கூடாது. யாகசாலையில் தீப்பிடிக்கத தகரக் கூரை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகம விதிப்படி மற்றும் இந்து அறநிலையத்துறை சட்ட விதிகள் படி நடத்த வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல், மின்விபத்து ஏற்படாமல் விழா நடத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும். பந்தல், மின் அமைப்புகளுக்கு பொதுப்பணித்துறையிடம் சான்று பெற்று நடத்த வேண்டும். தீயணைப்புத் துறையின் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுக்கு உள்ளூர் போலீசார், ஊர் காவல் படை மற்றும் தேசிய மாணவர் படை உதவி பெற வேண்டும். கும்பாபிஷேகத்தின் மீது போது சாரத்தின் மீதும் விமானத்தின் மீதும் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்னும் நிபந்தனைகளுடன் வருகிற 14-ம் தேதி காலை 7 : 40 மணி முதல் 8:30 மணி வரை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பணி கமிட்டியினர் கூறுகையில், அறநிலையத்துறை அனுமதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 14ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றனர். பாரதிய ஜனதா மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது, என்றனர்.