பதிவு செய்த நாள்
03
டிச
2023
11:12
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் ராமகிருஷ்ணர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் நிறுவும் விழா நடந்தது.
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. பணிகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. கோவிலின் கும்பாபிஷேக விழா வரும், ஜன., 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் உள்ள அனைத்து ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் கிளைகளின் சாதுக்கள், ராமகிருஷ்ண இயக்க உறுப்பினர்கள் என, அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட தங்கமூலம் பூசப்பட்ட ஆறடி உயரம் உள்ள கலசம் கோவிலின் மேல் நிறுவும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள பழைய ராமகிருஷ்ணர் கோவிலில் கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வித்யாலயா சாதுக்கள் கைகளில் கலசத்தை ஏந்தி, புதிய கோயில் வளாகத்தை சுற்றி வந்தனர். அவை கிரேன்களின் உதவியுடன் கோபுரங்களின் மேல் நிறுவப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில், வித்யாலயத்தைச் சேர்ந்த அனைத்து துறவிகளும் கலந்து கொண்டனர்.