சபரிமலையில் திருப்பதி மாடல் கியூ; போலீசாரின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2023 12:12
சபரிமலை; சபரிமலையில் திருப்பதி மாடல் சோதனை முறையில் வெற்றி பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். சுமார் பத்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கியூ காம்ப்ளக்ஸ் சரியாக பயன்படுத்தப்படாது தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இந்த கியூ காம்ப்ளக்ஸை பயன்படுத்தி பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பும் முறையை போலீசார் அமல் படுத்தினர்.
இதன்படி மரக் கூட்டத்தில் இருந்து பக்தர்கள் சரங்குத்தி வழியாக மட்டுமே சன்னிதானத்திற்கு அனுப்பப்படுகின்றனர். பெரிய நடை பந்தலில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து ஒவ்வொரு கியூ காம்ப்ளக்சில் இருந்தும் பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். இந்த நேரத்தில் சபரிமலையில் இருக்கும் பக்தர்கள் கூட்ட நிலவரம், எத்தனை மணிக்கு சன்னிதானம் செல்ல முடியும் என்பது போன்ற விபரங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.
இது சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அடிப்படை வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சபரிமலை சன்னிதானத்தில் மின்னல் பாதுகாப்பு கருவிகள் பழுதடைந்துள்ளதாகவும் இதை உடனடியாக சரி செய்யாத பட்சத்தில் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் போலீஸ்சாருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். பல்வேறு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னல் தாங்கி கருவிகள் பழுதடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தீயணைப்புத் துறை அதிகாரிகள், இடி மின்னலுடன் மழை வரும்போது பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். மலைப்பகுதி என்பதால் இடி மின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதையும் தீயணைப்பு துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.