சபரிமலையில் இருந்து வீடுகளுக்கு தபால் அனுப்ப பக்தர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2023 08:12
சபரிமலை; சபரிமலை கோயிலின் முத்திரையுடன் கூடிய தபால் கார்டுகள் தங்கள் வீடுகளுக்கு செல்வதில் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை தபால் அலுவலகம் பிசியாக காணப்படுகிறது.
கோயிலின் படத்தை முத்திரையாகக் கொண்ட இந்தியாவின் ஒரே போஸ்ட் ஆபீஸ் சபரிமலை. இதன் பின்கோடு எண் 689713.நவ. 17-ல் சபரிமலையில் மண்டல கால சீசன் தொடங்கிய பின்னர் சுமார் 2000 போஸ்டுகார்டுகள் இங்கு விற்பனையாகி அவை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .சபரிமலையில் இருந்து ஒரு தபால் தங்கள் வீட்டுக்கு வருவதை அவர்கள் புனிதமாக கருதுகின்றனர். இதுபோல பக்தர்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஐயப்பன் பெயரில் அழைப்பு அனுப்பி வைக்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான தபால்கள் இவ்வாறு வருகின்றது. இதை தபால்காரர் ஸ்ரீ கோயில் முன்பு வைத்த பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்கிறார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தபால் தலை சுமடாக கொண்டுவரப்படுகிறது. அது போல சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் கொண்டு செல்லப்படும். இவற்றுடன் பக்தர்களுக்காக பணம், மணி ஆர்டர் அனுப்புதல், பார்சல் அனுப்புதல், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் அனுப்புதல், அலைபேசி ரீசார்ஜ் போன்ற சேவைகளும் சன்னிதானம் மாளிகை புறத்தம்மன் கோயில் கீழ் உள்ள தபால் அலுவலகத்தில் கிடைக்கிறது