பதிவு செய்த நாள்
18
டிச
2023
10:12
ராமேஸ்வரம்; இலங்கையில் இருந்து கொண்டு வந்த 1 1/4 (ஒன்னேகால்) கிலோ வெள்ளி ராமர் பாதுகை ராமேஸ்வரம் கோயிலில் பூஜிக்கப்பட்டு, அயோத்திக்கு கொண்டு சென்றனர்.
ராமாயண வரலாற்றில் ஸ்ரீராமர், சீதையை மீட்டு அயோத்திக்கு திரும்பிய வழித்தடத்தை நினைவு கூறும் விதமாக, உ.பி., அயோத்தியில் உள்ள ராமராஜ்ஜிய யுவ யாத்திரை குழுவினர், ராமரின் பாதுகை மற்றும் ராமர், சீதையின் பாதம் வடிவத்தை வழித்தடத்தில் எடுத்து வந்து ஜன., 22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி 1 1/4 கிலோ வெள்ளியில் ராமர் பாதுகையும், நம்நாட்டில் 300 புனித தலத்தில் மண் சேகரித்து, இதனை ரசாயண கலவையில் ராமர், சீதை பாதம் வடிவமைத்தனர். இந்த ராமர் பாதுகை மற்றும் ராமர், சீதை பாதம் பொறித்ததை டிச.,15ல் இலங்கை கொழும்பில் பூஜிக்கப்பட்டு, விமானம் மூலம் டிச., 16ல் மதுரை வந்தனர். பின் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த குழுவினரை, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றனர். பின் ராமர் பாதுகை, பாதத்தை சுவாமி, அம்மன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு, காரில் தேவிபட்டிணம் சென்றனர். அங்கிருந்து திருச்சி, கர்நாடகா வழியாக 8 மாநிலங்களில் உள்ள புனித தலங்களில் தரிசித்து ஜன., 22ல் அயோத்தி கொண்டு செல்ல உள்ளதாக ராமராஜ்ஜிய யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.