சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் தரிசனத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2023 12:12
கூடலுார்; சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் தரிசனத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தேக்கடியில் ஆன்லைன் மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து அமைச்சர்கள் குழு புதிய கேரள சங்கமம் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கேரளாவில் இடது சாரி கூட்டணி அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளை விளக்கி மக்களிடம் குறை கேட்கும் கூட்டமும் நடத்தப்படுகிறது. இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் இதற்கான கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தேக்கடியில் சபரிமலை குறித்து ஆன்லைன் மூலம் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது. தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் சசீந்திரன், தலைமைச் செயலாளர் வேணு, தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், மாநில காவல்துறை தலைவர் ஷேக் தர்வேஷ் சாகிப் ஆகியோர் ஆன்லைனில் பங்கேற்றனர். சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் முதல் 19 நாட்களில் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். டிச. 6 முதல் 4 நாட்களில் மட்டும் 88 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதன் காரணமாக தரிசன நேரமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டார். சபரிமலையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலான தன்னார்வலர்களை இப்பணிக்காக நியமிக்கப்பட வேண்டும். பார்க்கிங் பிரச்னை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தேவசம் போர்டு செய்ய வேண்டும். பக்தர்கள் வரும் பாதைகளில் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு இக்கூட்டத்தில் முதல்வர் பேசினார்.