சபரிமலை; சபரிமலை பக்தர்கள் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் கூட்டம் குறைவான நாட்களை அடையாளம் காண வசதி இல்லாததால் இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சபரிமலை நடப்பு மண்டல சீசனில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம்| அலைமோதுகிறது. தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திலிருந்து 24 முதல் 48 மணி நேரம் தாமதமாக தான் சன்னிதானம் செல்ல முடிகிறது. கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஆன்லைன் க்யூ என்று சொல்லப்பட்டாலும் அதற்குரிய வசதிகள் இந்த இணையதளத்தில் செய்யப்படவில்லை. ஒரு நாளில் பல்வேறு சமயங்களில் ஸ்லாட்டு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்தர் குறிப்பிட்ட சிலாட்டில் பதிவு செய்யும்போது அவர் எத்தனையாவது நபராக முன்பதிவு செய்கிறார்?அந்த சிலாட்டில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ள வசதி இல்லை.இந்த வசதி செய்யும் பட்சத்தில் கூட்டம் குறைவான நாட்களை பக்தர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஒரே நாளில் அதிகமான பக்தர்கள் கூடுவது தடுக்கப்படும்.
WWW.Sabarimala.org இணையதளத்தின் கட்டுப்பாடு போலீஸ் வசம் இருந்து தற்போது தேவசம்போர்டு கைவசம் உள்ளது. இணையதளத்தில் முன்பதிவு முடிந்தால் எருமேலி ,நிலக்கல் போன்ற இடங்களில் ஸ்பாட் புக்கிங் வழியாக பல்லாயிரம் பேர் தினமும் முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாகவும் நெருக்கடி அதிகரிக்கிறது . மண்டல காலம் தொடங்கிய நவம்பர் 17 முதல் 30 வரை பக்தர்கள் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவான நாட்களை அடையாளம் காண வசதி இருந்தால் பக்தர்கள் இந்த நாட்களை தேர்வு செய்திருக்க வாய்ப்பு உள்ளது. கூட்டம் காரணமாக நடை திறக்கும் நேரம் மாலை 4:00 மணிக்கு பதிலாக 3:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது ஆனால் இணையதள ஸ்லாட்டுகளில் அந்த ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படாமலேயே உள்ளது.