சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 04:12
கூடலுார்; சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் காலை 7 மணிக்கு பின்பும் மதியம் 2 மணிக்கு முன்பும் புல்மேட்டுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கேரள போலீசார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
சபரிமலை மண்டல பூஜை டிசம்பர் 26ல் நடைபெறுகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை செல்ல நிலக்கல், பம்பை வழியாக ஒரு பாதையும், எரிமேலியில் இருந்து கல்லிடும் குன்று, காளை கட்டி வழியாக நடைபாதையும் உள்ளது. இது தவிர வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வழியாக புல்மேடு, சத்திரம் பாதையும் உள்ளது. சீசன் துவங்கியதில் இருந்து பம்பை வழியாக பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூரம் குறைவாக உள்ள புல்மேடு சத்திரம் பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் கவனத்திற்கு: வண்டிப்பெரியாறிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் புல்மேடு உள்ளது. இதற்கு ஜீப் வசதி உண்டு. புல்மேட்டில் இருந்து ஆறு கி.மீ., தூரம் வனப்பாதையில் நடந்து சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம். வனப்பாதையில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் புல்மேட்டில் காலை 7 மணிக்கு பின்பும் மதியம் 2 மணிக்கு முன்பும் மட்டுமே சன்னிதானத்திற்கு நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்து நிமிடம் தாமதமாக புல்மேட்டுக்கு சென்றாலும் கேரள போலீசார் அனுமதிக்காமல் பக்தர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். மீண்டும் பக்தர்கள் வண்டிப்பெரியாறு பம்பை வழியாக பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்னையை தவிர்க்க கேரள போலீசார் அறிவித்துள்ள நேரத்திற்குள் பக்தர்கள் புல்மேடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.