சபரிமலை,: சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. டிச. 27-ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கி காணிக்கை வழங்கியிருந்தார். இந்த அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கி சபரிமலை ரதத்தில் வைக்கப்பட்டு பவனி புறப்பட்டது. நேற்று ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோயிலில் தங்கிய இந்த பவனி இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கோந்தி முருங்கமங்கலம் கோயிலை வந்தடையும். நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு இரவு பெருநாடு சாஸ்தா கோயிலை வந்தடையும்.
டிச. 26 காலை இங்கிருந்து புறப்படும் பவனி மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும். மதியம் 3:00 மணி வரை பம்பை கணபதி கோயில் முன் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட பின்னர் பேடகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.
மாலை 6: 30 மணிக்கு அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி பெற்று மூலஸ்தானத்தில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவர். டிச.27 காலை 10:30 முதல் 11:00 மணிக்குள் மண்டல பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலகாலம் நிறைவு பெறும். அதன் பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.