பதிவு செய்த நாள்
01
ஜன
2024
09:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான, கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலை, வரும் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வு நாட்டில் உள்ள, 140 கோடி பேருக்கும் மற்றொரு தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மொத்தம், 70 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிரமாண்ட கோவில், கோடிக்கணக்கான பக்தர்களின் வெற்றியாகவும், பல நுாற்றாண்டுகளின் பக்தி மற்றும் தியாகத்தின் சான்றாகவும், ஆன்மிக முக்கியத்துவத்தின் கலங்கரை விளக்கமாகவும் விளங்கும். அசுர வேதம் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த ஐந்து நுாற்றாண்டுகளில், கடவுள்களின் நகரமான அயோத்தி போர், கலவரம், சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்படாமல், காலத்தின் சோதனையாக நிற்கிறது. அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கி வருவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலரும், ஸ்ரீராமர் கோவில் கட்டுமான குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ரா உன்னிப்பாக கவனிக்கிறார். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அரசும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சனாதனத்தின் அடையாளம்; அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு, 2020 ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய சனாதன கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் இக்கோவில், 2025ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும். அயோத்திக்கு தற்போது, 2.5 கோடி சுற்றுலா பயணியர் வரும் நிலையில், கோவில் திறப்புக்கு பின், இந்த எண்ணிக்கை 25 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த தீபாவளி அன்று, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், மகர சங்கராந்தி மற்றும் ஜன., 22ம் தேதி கோவில் திறப்புக்கு பின், கோவில் நகரமான அயோத்திக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகரிக்கும் என்றார்.
பொறியியல் அற்புதம்; ராமர் கோவில் கட்டுமானம் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, கடவுள் மீது பக்தர்கள் வைத்த நம்பிக்கை மற்றும் பொறியாளர்கள் அவர்களது திறமை மீது வைத்த அபிமானத்தை வெளிப்படுத்துகிறது. ராமர் கோவிலின் அசல் வடிவமைப்பு, 1988ம் ஆண்டில், குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த, சோம்புரா குடும்பத்தால் வடிவமைக்கப்பட்டது.
குஜராத்தின் சோம்நாத் கோவில் உட்பட, உலகளவில், 100க்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைப்பதில், 15 தலைமுறைகளாக இக்குடும்பத்தினர் பங்களித்துள்ளனர். ராமர் கோவிலின் தலைமை கட்டடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா. இவரது இரு மகன்களான நிகில் சோம்புரா, ஆஷிஷ் சோம்புரா அவருக்கு உதவியாக இருக்கின்றனர். அவர்களும் கட்டடக் கலைஞர்களே.
ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியதாவது: கோவிலின் அஸ்திவாரத்திற்காக மண் பரிசோதனை செய்த போது, மணல் இல்லை என்பதும், அங்கு துாய தளர்வான மணல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த மணல், அஸ்திவாரம் கட்டுவதற்கு பொருத்தமற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுமானப் பகுதிக்கு அருகே, பல நுாற்றாண்டுகளாக சரயு நதி ஓடியதால் மணல் தளர்வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புதுடில்லி, குவஹாத்தி, சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,களின் வல்லுனர்கள் உதவி கோரப்பட்டது. மேலும், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் உதவியும் நாடப்பட்டது. அவர்கள் தந்த ஆலோசனைப்படி, கட்டுமான இடத்தில், 6 ஏக்கரில், 14 மீட்டர் வரை மணல் அகற்றப்பட்டது. இதன் பின், அந்தப் பகுதி ஒரு கடல் போல காட்சி அளித்தது. மணல் அகற்றப்பட்ட பகுதிகளில், அஸ்திவாரத்திற்கு பாறைகளை தயார் செய்ய, ரோல்டு காம்பாக்டட் கான்கிரீட் எனப்படும் விசேஷ கான்கிரீட் கலவை, 56 அடுக்குகளால் நிரப்பப்பட்டது. இரும்புத் துண்டு இல்லாத இந்த சிறப்பு கான்கிரீட், அடித்தளத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் எஞ்சிய பகுதி, ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட கிரானைட், 21 அடி உயர பீடத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நாகரா கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட ராமர் கோவில், ராமேஸ்வரம், திருப்பதி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தென்னிந்திய கோவில்களின் அம்சங்களை உள்ளடக்கியது.
கோவிலின் வடிவமைப்பு; மற்றும் கட்டுமான மேலாளர் கிரிஷ் சஹஸ்ரபோஜினி கூறியதாவது: தமிழக தச்சர்கள் இக்கோவிலில், 392 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் வழியாக இக்கோவிலுக்குள் செல்ல முடியும். இதில், 14 கதவுகள் தங்கத்தாலானவை. ராஜஸ்தான், ம.பி.,யில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து மரம்; தெலுங்கானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட கிரானைட் கற்களை தமிழகத்தைச் சேர்ந்த தச்சர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், கர்நாடகாவில் இருந்து கிரானைட் தொழிலாளர்கள், ராஜஸ்தானில் இருந்து சிலை செதுக்குபவர்கள் மற்றும் ஒடிசாவில் இருந்து மணற் கல் செதுக்குபவர்கள் வாயிலாக, கிரானைட் கற்கள் உருளை வடிவில் வடிவமைக்கப்பட்டன. ராமர் கோவிலில், இரு வெவ்வேறு சிலைகள் அமைக்கப்பட உள்ளன. கடவுள் ராமரின் குழந்தை சிலை தரைத்தளத்திலும், முதல் தளத்தில் கடவுள் ராமரின் இளம் வயது சிலையும் வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தம், 732 மீட்டர் நீளமும், 14 அடி அகலமும் கொண்ட கோவிலை சுற்றி வரும் வட்டப்பாதை அமைந்துள்ளது. இது, வட மாநிலங்களில் உள்ள கோவில்களிலேயே அதிகம். பிரதான சன்னிதியைத் தவிர, இரண்டு மாடிகள் மற்றும் 14 அடி அகலமுள்ள சுற்றுப்பாதையின் நான்கு மூலைகளிலும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், ராமாயணத்தை சித்தரிக்கும், 125 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. சூரியன், மா பகவதி, கணபதி, சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களும் இதில் அடங்கும். வடக்கு பக்கத்தில் அன்னபூரணி, ஹனுமன் ஆகியோருக்கு கோவில்கள் உள்ளன. கோவிலின் தெற்கு பகுதியில், கடவுள் ராமருடன் தொடர்புடைய, -வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், தென் மாநிலங்களில் அகத்திய முனிவரின் கோவில்களும் உள்ளன. மேலும், கங்கையைக் கடக்க ராமருக்கு உதவிய படகோட்டி நிஷாத்ராஜ், ராமர் மற்றும் அஹல்யா தேவிக்கு பழங்களை வழங்கிய, பழங்குடி துறவி ஷப்ரி ஆகியோரின் கோவில்களும் இடம்பெற்றுள்ளன. நாட்டை இணைக்கும் சீதையை இலங்கை அரசன் ராவணன் கடத்திய போது, அவருடன் சண்டையிட்ட பறவை ஜடாயுவின் சிலையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, பிரதமர் மோடி உரையாற்றிய காசி- தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளின் வாயிலாக, கலாசார ஒற்றுமையை உயர்த்தி, ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம், வடக்கையும், தெற்கையும் இணைக்கும், பா.ஜ.,வின் சமீபத்திய முயற்சியே, கோவிலின் கட்டடக் கலை ஆகும்.
கிரிஷ் சஹஸ்ரபோஜினி மேலும் கூறியதாவது: எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், ராமர் கோவிலை கட்டி உள்ளோம். பரந்து விரிந்த, 70 ஏக்கர் நிலத்தில், 600க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்படும். இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நேரடி மின் இணைப்பு ஆகியவற்றுடன், இக்கோவில் தன்னிறைவு பெறுகிறது. 100 கழிப்பறைகள், 25,000 பேரை கையாளக்கூடிய மையம் மற்றும் சுகாதார மையமும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -