பதிவு செய்த நாள்
02
ஜன
2024
10:01
பெரியகுளம்,; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆங்கில புத்தாண்டில் பக்தர்கள் கூட்டம் ஏராளமானோர் வந்த நிலையில் அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி உட்புறம் திறக்கப்படாததால் பக்தர்கள் மன வருத்தத்தில் சென்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தபடியாக, புண்ணிய ஸ்தலமான இக்கோயில் அருகே செல்லும் வராகநதியில் வலது, இடதுபுறம் அமைந்திருக்கும் ஆண்,பெண் மருத மரங்கள் நடுவே குளித்து பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனை வணங்குவதால் சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது ஐதீகம். கோயிலில் தேரோட்டம், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, ஏகாதசி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை உட்பட பல்வேறு விசேஷங்கள் உட்பட ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அர்ச்சகர்கள் பற்றாக்குறை: தனிக்கொடி மரம் அமைந்துள்ள பாலசுப்ரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் உட்பட கோயில் பிரகாரங்களில் அமைந்துள்ள ஏராளமான பரிவார தெய்வங்களுக்கு இந்தக் கோயிலில் இரு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளனர். ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசிக்க வந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் ஜன.1 முதல்நாள் என்பதால் மாலையுடன் வந்திருந்தனர். அர்ச்சர்கள் பற்றாக்குறையால் அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி உட்புறம் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பக்தர்கள் மனவருத்தமடைந்தனர். சுவாமிகளுக்கு மாலைகள் வேண்டாம், வெறுப்பாக சூட்டப்பட்டது. செயல் அலுவலர் வருவதில்லை: பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், மலை மேல் வைத்தியநாத சுவாமி கோயில், கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. முக்கியத்துவமான இந்த கோயில்களுக்கு ஜூலையில் செயல் தலைவர் ராமதிலகம், விருதுநகர் மாவட்டத்திற்கு பணி மாறுதலில் சென்றார். இதனால் ஆண்டிபட்டி தர்மசாஸ்தா கோயில், செயல் அலுவலர் ஹரிஷ்குமார் (பொறுப்பு) பணிக்கு வந்தார். இவர் இதுவரை அர்ச்சகர்களை வரவழைத்து மீட்டிங் போட்டது கிடையாது. முக்கிய திருவிழாக்களுக்கு வருவதும் கிடையாது. இது குறித்து ஹரிஷ்குமார் கூறுகையில்: பெரியகுளம் கோயில்களுக்கு வாரம் ஒரு முறை வருகிறேன். மாதம் எத்தனை நாட்கள் வருகிறேன் என கூற முடியாது என்றார்.ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் பெரியகுளத்திற்கு நிரந்தரமாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.