பதிவு செய்த நாள்
03
ஜன
2024
10:01
சென்னை; தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் ராமர் சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் துவக்க விழா நடந்தது.
அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள கோவில் கருவறையில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வரும், 22ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அனைவர் இல்லத்திலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுங்கள் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பெருமாள் கோவிலில் அயோத்தியில் ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு இன்று முதல் வரும் 26-ந்தேதி வரை தினசரி மாலை சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான துவக்க விழா மற்றும், பத்தரை அடி உயர ராமபிரான் சிலை திறப்பு விழா இன்று மாலை நடந்தது. இதில், ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனர் - அறங்காவலர் உறுப்பினரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பராசரன், விசுவ இந்து வித்யா கேந்திரா தலைவர் வேதாந்தம், உபன்யாகர் வேளுகுடி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
விழாவிற்கு தலைமை தாங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் பேசியதாவது: ராமபிரான் பிறந்த இடத்தில் கோவில் அமைத்து சம்ரோக்ஷணம் நடக்க உள்ளது. அந்து கோவில் அமைவதற்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பராசரன் பல ஆண்டுகள் போராடி ஹிந்துக்களின் கனவை நினைவாக்கியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் அமைத்த பிரதமர் மோடி மற்றும் அதற்கான போராடிய அனைவரையும் நினைவு கூறுவோம். பீடத்துடன் கூடிய பத்தரை அடி உயர ராமபிரான் சிலை பைபர் வாயிலாக செய்யப்பட்டது. வரும் 26ம் தேிவரை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் மாலை 6:30 மணி முதல் 7:30 மணிவரை கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மூத்த வழக்கறிஞர் பராசரன் ஸ்ரீராமபிரான் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: வேள்விக்குடி என்பதுதான் வேளுகுடி என மருவியுள்ளது. அங்கு நிறைய வேள்விகள் செய்யப்பட்டுள்ளன. ராவண சம்ஹாரம் செய்ய எடுத்த அவதாரம் ராம அவதாரம். ராமரின் வனவாசத்திற்கு தயார் செய்தவர் விஸ்வாமித்திரர். இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
வேதாந்தம் பேசியதாவது: ராமஜென்ம பூமி, 500 ஆண்டுகள் போராட்டம். அதில், 50 ஆண்டுகள் நான் பங்கேற்றுள்ளேன். டிச., மாதம் அயோத்தி சம்பவம் நடக்கும் போது உடன் இருந்தேன். ராமயணத்தில் கல் மீது ராமபிரான் பாதம் பட்டதும் அகல்யாவிற்கு விமோசனம் கிடைக்கிறது. அதேபோல, ராமரின் பார்வை பராசரன் மீது பட்டதும் ராமஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. திருப்பதி தேவஸ்தானத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கும் விழா எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
‘அயோத்தியில் ஸ்ரீ ராம அவதாரம்’ என்ற தலைப்பில் உபன்யாசகர் வேளுக்குடி பேசியதாவது: ராமபிரான் அயோத்தியில் தான் இருப்பாரா என்ற கேள்வி, 500 ஆண்டுகளாக கேட்டாகிவிட்டது. அவர் அவதரித்த இடம்தான் அயோத்தி. பலாதிபலா மந்திரத்தால் ராமபிரானின் பக்தர்களுக்கு பலம். ராமபிரானுக்கு அயோத்தி மீட்டு கொடுத்தது கைங்கர்யம்தான். பராசரன் என்றால் இம்சிப்பவர். அவர் வியாசரின் தந்தை. சாஸ்திரத்திற்கு, பகவானுக்கு, தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களை இம்சிப்பவர். ராமாயணம் வாயிலாக அயோத்தி தெரியும். 32,000 வருடங்கள் கலியுகம். அது பிறந்து, 5,125ம் ஆண்டில் வசிக்கிறோம். தெற்கு கோடி ஆழ்வார் திருநகர், வடக்கு கோடி அயோத்தி. அயோத்திய ராமர் கோவில் வரும் காலங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி தான் பல பெரிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ஷேத்திரம் கூட பல காலகட்டங்களில் உருவானது. தினமும் ராம நாமம் கூறுவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் கோபால்ஜி, டி.டி.டி., அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் 26ம் தேதி வரை மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கர்நாடக இசை கலைஞர்களின் கச்சேரி மற்றும் வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.