பதிவு செய்த நாள்
09
ஜன
2024
08:01
அயோத்தியை ஆளப்போகிறார் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தந்தையின் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் போன போது நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்,ராமரின் தம்பி பரதன் ,ராமரிடம் அவரது புாதுகையை(காலணி) கேட்டு வாங்கிக் கொண்டு வந்து அதை சிம்மாசனத்தில் வைத்துதான் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இப்படி ராமரின் காலணிக்கு 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி செய்த பெருமை இருக்கிறது.
இதோ ராமருக்கான இன்னோரு பாதுகையின் கதை இது சாதாரண பாதுகை அல்ல 65 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க பாதுகைகளாகும். தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச சாஸ்திரி(வயது 64) பரம ராமபக்தர். வருமான வரித் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்த ஒரு கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளியில் சுமார் 65 லட்ச ரூபாய் செலவில் ராமருக்கான தங்க காலணியை தயார் செய்துள்ளார்.
வனவாசத்தின் போது அயோத்தியில் இருந்து ராமர் எந்த வழியாக நடந்து ராமேஸ்வரம் வந்தார் என்பதை ஆராய்ச்சி செய்து அறிந்து ராமர் வந்த அந்த வழியாகவே தான் நடந்து சென்று காலணிகளை ஒப்படைக்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து ராமர் பாதுகையுடன் கூடிய தனது பாதயாத்திரையை தொடங்கினார். ஆந்திரா,ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக சென்ற அவர் தற்போதுஉத்தர பிரதேசத்தின் வழியாக அயோத்தியை நெருங்கிவிட்டார்.இன்னும் நுாற்று சொச்சம் கி.மீட்டர் துாரம்தான் உள்ளது.அடுத்த ஒரு வார காலத்திற்குள் அயோத்தியை சென்றடைந்து ராமர் கோயிலுக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்கிவிடுவார்.
இதுதொடர்பாக ஸ்ரீநிவாச சாஸ்திரி கூறியதாவது: எனது தந்தை தீவிர அனுமன் பக்தர். அயோத்தி கர சேவையில் அவர் பங்கேற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது எனது தந்தையின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் அவரது காலத்தில் ராமர் கோயில் கனவு, நனவாகவில்லை, இப்போது அவரது கனவு நனவாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைதொடர்ந்து ராமர் கோயில் கட்டப்பட ஆரம்பித்ததும் எனது பங்களிப்பாக 5 வெள்ளி செங்கற்களை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினேன். இப்போது ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ராமருக்கு தங்கப் பாதுகையை காணிக்கையாக வழங்க முடிவு செய்து தயார் செய்தேன்.
தங்க பாதுகையை தலையில் சுமந்தபடி பல்வேறு கே்ாவில்களுக்கு சென்றபடி சுமார் பல ஆயிரம் கி.மீ. தொலைவை நடந்து கடந்துவிட்டேன், நாள் தோறும் 50 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொள்கிறேன். அயோத்தி சென்ற பிறகு முதல்வர் ஆதித்யநாத்திடம் தங்க பாதுகையை சமர்ப்பிப்பேன்,எனது வாழ்நாளின் கடைசி காலத்தை ராமரோடு கழிக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்காக அயோத்தியில் ஒரு வீட்டை கட்டி தங்கவும் முடிவு செய்துள்ளேன்.,என்றவர் ஜெய் ஸ்ரீராம் என்று கூறி நடகக ஆரம்பித்தார், அயோத்தியை அடையப்போகும் ஆர்வம் அவரது நடையில் தெரிந்தது.