பதிவு செய்த நாள்
12
ஜன
2024
11:01
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய நரேந்திர மோடியை தேர்வு செய்தது ராமர் தான் என புகழாரம் சூட்டினார் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி , 1990-ம் ஆண்டு செப்.25-ம் தேதி குஜராத்திலிருந்து அயோத்திக்கு ‛‛ராம் ரத யாத்திரை நடத்தினார். அதன் பிறகு பா.ஜ.,வின் செல்வாக்கை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், ஜனதேஷ் யாத்திரை (1993), ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரை (1997), பாரத் உதய் யாத்திரை (2004), பாரத் சுரக்ஷா யாத்திரை (2006) ஆகியவற்றை, அத்வானி மேற்கொண்டார். 2014-ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.,ஆட்சி அமைந்தது. அயோத்தி ராமர்ஜென்மபூமி தொடர்பான வழக்கி்ல் உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது,
2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்ததையடுத்து வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் கோயில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ. மூத்த தலைவருக்கு அழைப்பிதழ வழங்கப்பட்டது. அத்வானி பங்கேற்பார் என விஷவ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.
இது குறித்து அத்வானி தெரிவித்துள்ளதாவது, அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன் விதி முடிவு செய்துவிட்டது. இதற்காக நான் நடத்திய ராம ரதயாத்திரையில் நான் ஒரு ‛தேரோட்டி மட்டுமே. ராமர் கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்ய நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்ததே ராமர் தான். என்றார்.