பதிவு செய்த நாள்
25
ஜன
2024
08:01
வடபழநி: தைப்பூச விழா, வடபழநி முருகன் கோவிலில், வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடபழநி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் இருந்து, கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இவ்விழாவையொட்டி, வடபழநியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என, பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்த நிலையில், மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அலகு குத்தி தேர் இழுத்தும், தீ மிதித்தும் பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றினர்.
பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு; தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவடி. அலகு குத்தி வரும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மேற்கு கோபுரம் வழியாக, பால் குடம் எடுத்து வருவோர், பொது தரிசனம் வருவோர் தெற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத்தையொட்டி, இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.