பதிவு செய்த நாள்
29
ஜன
2024
11:01
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில், பழமையான கச்சி வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. கோயிலை ஒட்டிய மலையில் கச்சிப்பெருமாள் திருமலை என்ற கோயிலும் உள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில், படிகளிலும் காணும் இடம் பாறைகளிலும் எங்கும் கல்வெட்டுகளாக உள்ளன.
கோயில் கருவறை, மண்டபம், கோயில் பின்புறச் சுவர்கள் என எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் நிறைந்திருக்கின்றன. வௌவால் எச்சங்கள், புழுதி மண் படிந்த தரையை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், கற்தரையில் கல்வெட்டுகள் பளிச்சிடுகின்றன. கோயிலுக்கு எதிரில் இருந்த கோட்டை, போரில் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிய அரசன் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268 -1311) காலத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதன்பிறகு விஜயநகர மன்னர்கள் காலத்திலும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. பொப்பச்சியார் வசந்தநாயக்கர், வாசுதேவ நாயக்கர், கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர், இராயப்ப நாயக்கர் உட்பட பல நாயக்க மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் பாறைகளிலும் கோயில் சுவர்களிலும் உள்ளன.
இவ்வூர் பாண்டியர் காலத்தில் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டிருக்கிறது. கச்சி பெருமாள் பாளையம் என்பதே கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் மருவி, கச்சிராயப்பாளையம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. உய்யக் கொண்டாள், ஆண்டவர், தாயிலும் நல்லாள், வேம்பி என நால்வர், இந்தக் கோயிலில் தினமும் பூசை செய்து ஆடிப் பாடியுள்ளனர். இந்த நால்வரும் திருவாமாத்தூர் செட்டியார் விண்ணவதீரர் பொன்னப் பிள்ளையிடம் இருந்து கோயிலுக்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இக்கோயில் கல்வெட்டுகளைப் பற்றி மரு.அருண்குமார் என்பவர், வரலாற்றில் ஈயனுார் (எ) கச்சிராயப்பாளையம் என்ற நூல் எழுதியுள்ளார். ஒரு காலத்தில் அரசர்கள், ஆட்சியாளர்கள், விழாக்கள் என்று சிறப்புற்றிருந்த இந்த மலைக்கோயில், இன்று உடைந்தும் சிதைந்தும் வரலாற்றைத் தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கிறது.