அம்மன் கோவில் விழாவிற்காக அக்னி சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2024 11:01
மானாமதுரை: தென் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற உள்ள பொங்கல் விழாவிற்காக மானாமதுரையில் மண்ணாலான தீச்சட்டிகள் மும்முரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்ணாலான மண்பாண்ட பொருட்கள் தரத்தோடும் கலை நயத்துடனும் இருப்பதினால் ஏராளமானோர் இங்கு வந்து வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் தை,மாசி,பங்குனி மாதங்களில் தென் மாவட்டங்களில் உள்ள தாயமங்கலம், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர்,இருக்கன்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களின் போது ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் தீச்சட்டிகளை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மானாமதுரையில் தயாரிக்கப்படும் தீச்சட்டிகள் மிகுந்த கலை நயத்துடனும் தரமாகவும் இருப்பதினால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தீச்சட்டிகளை வாங்கி சென்று வருகின்றனர். இதற்காக நாங்களும் தீச்சட்டிகள் தயாரிக்கும் போது விரதமிருந்து பயபக்தியுடன் தயாரித்து வருகிறோம், என்றனர்.