பதிவு செய்த நாள்
29
ஜன
2024
12:01
புதுச்சேரி : புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோவிலில் துவங்கி, வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில் வரை, சிவ பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம், சிவ சிந்தனையோடு சிவனோடு ஒரு நாள் எனும் நோக்கில் ஆண்டுதோறும், நடைப்பயணத்தை நடத்துகிறது. இந்நிலையில், உலக நன்மையை வேண்டி, மூன்றாம் ஆண்டு நடைப்பயணம், புதுச்சேரி, காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, நேற்று காலை 8:00 மணிக்கு புறப்பட்டது. இதில், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் சிவனடியார் சிவ குமாரசாமி முன்னிலை வகித்தார். இந்த நடைப்பயணம், ராஜீவ்காந்தி சிக்னல், கதிர்காமம், மூலக்குளம், அரும்பார்த்தபுரம் வழியாக, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், 1:00 மணிக்கு நிறைவு பெற்றது. பயண வழியில், மூலக்குளத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பக்தர்களை வரவேற்றார். திருக்காமீஸ்வரர் கோவிலை பக்தர்கள் வந்தடைந்த உடன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, அங்கு பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.