பதிவு செய்த நாள்
15
பிப்
2024
01:02
தஞ்சாவூர், கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி இன்று(15ம் தேதி) சிவன் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதே போல ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மக விழாவையொட்டி காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் இன்று(15ம் தேதி) கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 21ம் தேதி திருக்கல்யாணம், பிப்ரவரி 23ம் தேதி காலை 9:00 மணிக்கு சோமேஸ்வரர், காளகஸ்தீஸ்வர் கோவில் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மேல் காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளக்கரையில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் ஏக தின உற்சவமாக, பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளுகின்றனர். இதேபோல, சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய மூன்று பெருமாள் கோவில்களில் மாசிமக கொடியேற்றம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பிப்.24-ம் தேதி தேரோட்டம், பிப்ரவரி 26ம் தேதி விடையாற்றி, புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற உள்ளது. சாரங்கபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 24ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது.