பாலமேடு, அலங்காநல்லூர் அருகே 4 கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 04:02
அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியில் உள்ள முத்து கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.பிப்.,13ல் முதற்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்து கருப்பண்ண சுவாமி கோயில் கொண்டையம்பட்டி, லிங்கவாடி பங்காளிகள் செய்திருந்தனர். அதலை கிராம கண்மாய் கரையில் உள்ள பூரண புஷ்கலா சமேத வெங்கலமடை அய்யனார் மற்றும் சோனைச் சாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து விநாயகர், பூரண புஷ்கல சமேத வெங்கலமடை அய்யனார் சுவாமி, குதிரை மேல் சுவாமிகள், சுப்ரமணியசாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சோனைச்சாமி கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள், கரைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
பாலமேடு; பாலமேடு அருகே வலையபட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜமீன்தார்கள் முன்னிலையில் நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு பல்வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுற்றுவட்டார கிராம மக்கள் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழவை முன்னிட்டு இரவு மகமாயி எனும் புராண நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். பாலமேடு அருகே தெத்துரரில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை புனித நீர் கலசங்களை வைத்து 3ம் கால யாகசாலை பூஜைகள் செய்தனர். கலசங்கள் புறப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை வேங்கை புலி கரையை சேர்ந்த தலைமறையானுக்கு பாத்தியப்பட்டவர்கள் கண்ணிமார்பட்டி, தெத்துரர், நாராயணபுரம் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர்.