பதிவு செய்த நாள்
16
பிப்
2024
01:02
விஜயநகரா மாவட்டத்தில் உள்ள பல கோவில்கள், விஜயநகர பேரரசர்கள், ஹொய்சாளா மன்னர்கள் காலத்து கட்டடக் கலையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளன. ஹம்பியில் உள்ள கோவில்கள், ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பால், உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஹம்பியில் ஹொய்சாளா மன்னர் காலத்தில் கட்டப்பட்ட, விருபாக் ஷா கோவில் கட்டட கலை, அதிசயத்தை தாங்கி நிற்கிறது. இந்த கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும், ரங்க மண்டப சுவர் மீது, நிழல் தலைகீழாக விழுகிறது. இதன் மர்மத்தை பல விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இன்றுவரை யாராலும் முடியவில்லை. தலைகீழாக விழும் நிழல், புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து பக்தர்கள், கட்டட கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆண்டாண்டு காலமாக விவாதித்து வந்தாலும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவே இல்லை. கடந்த 1565ம் ஆண்டு நடந்த போரில், ஹம்பி நகரே அழிந்த போதும், இந்த கோவிலுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையாம். இன்று வரை அந்த கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படும், தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. மேலும், கூட்டு திருமணங்களும் அங்கு நடக்கும். பெங்களூரில் இருந்து 342 கிலோ மீட்டர் துாரத்தில், ஹம்பி அமைந்து உள்ளது. அரசு பஸ் வசதி உள்ளது. ரயிலில் சென்றால் ஹொஸ்பேட்டில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.