பதிவு செய்த நாள்
16
பிப்
2024
03:02
மயிலாடுதுறை; 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் அருளாசி வழங்கினார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தருமை ஆதீனம் ஆசி வழங்குதல் மற்றும் மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசமப்ந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கி ஆசி வழங்கினார். அவர் பேசுகையில்; மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வணங்க வேண்டுமென்பது நமது பாரம்பரியம். மாணவர்கள் ஆசிரியர்களை போற்றி வணங்க வேண்டும். பெண்கள் கணவரையும், கணவன் மனைவியையும் மதிப்பதுபோல் கணவன், மனைவி, பிள்ளை மூவரும் சேர்ந்து ஆசிரியரை மதிக்க வேண்டும்.
அனைவரும் சேர்ந்து இறைவனை வணங்க கோயிலுக்கு செல்ல வேண்டும். பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டி ஆசிரியர்களும், பெற்றோரும் போராடிகொண்டிருக்கிறார்கள். வகுப்பறையில் சரியாக பாடங்களை படித்தால் சிறப்பு வகுப்புகள் தேவையில்லை. மாணவர்களின் கவனசிதறல் ஏற்படுவதால் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் போற்றி கல்வி பயின்றால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம் என்றார். தொடர்ந்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெற்றனர். பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் தருமை ஆதீனம் குருமகா சன்னிதானத்திடம் ஆசிபெற்றனர். இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், பள்ளி செயலர் திருநாவுக்கரசு, வக்கீல் சிவபுண்ணியம், தலைமை ஆசிரியர் வேலுசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.