ஏகாதசி, திருவாதிரை விரதம்; சிவ, விஷ்ணு வழிபாடு சிறப்பை தரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2024 07:02
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும் வீட்டில் செல்வம் பெருகும் சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் வறுமையும் ஓடிவிடும். கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும். இவ்வுலக வாழ்வும், இறப்புக்கு பின் உள்ள வாழ்வும் இனிமையாக கழியும். இன்று பெருமாளை வழிபட நலமும், வளமும் சேரும்.. நல்லதே நடக்கும்.
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் நன்மை தரும் என்று உபதேச காண்டச் செய்யுள் விளக்குகிறது. இவ்விரதத்தை முருகப்பெருமான் மேற்கொண்டு சிவபெருமானின் அருள்பெற்றார். இன்று நடராஜர், பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்.