புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர், அன்னை ஆசிரமத்தில் தமிழக கவர்னர் ரவி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவிய அன்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்தார். இவரது இயற்யெர் மீரா அல்பாசா. அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரிக்கு வந்த அன்னை, ஆன்மிக சேவை புரிந்து, 1973 நவம்பர் 17ம் தேதி மறைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் தேதியான பிப்ரவரி 29ம் தேதி அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி நேற்று அன்னையின் பொன்னொளி பூமிக்கு வந்த நாள், அரவிந்தர் ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டது. அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப் பட்டது. ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சியும் நடந்தது. அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தமிழக கவர்னர் தரிசனம்; சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கில் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். அரவிந்தர், அன்னை ஆசிரமத்தில் தமிழக கவர்னர் ரவி தரிசனம் செய்தார். அரை மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த கவர்னர் ரவி புறப்பட்டு சென்ற பிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.