பதிவு செய்த நாள்
25
மார்
2024
12:03
தந்தையான சிவனின் மறுவடிவம் முருகன். தாயான பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரசம்ஹாரத்தின் போது தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி வேலாக்கி கொடுத்தாள் பார்வதி. சூரனை வேலால் வதம் செய்து முருகன் வெற்றி பெற்றார். வேல் என்றால் வெற்றி. தினமும் முருகன் கோயிலுக்கு செல்வோருக்கு வெற்றி மேல் வெற்றி தான்.
கிரிவலம் செல்வோமா; உடல், மனநோய் தீரவும், பிறப்பற்ற நிலையை அடையவும் பழநியில் கிரிவலம் (5 கி.மீ.,) செல்கின்றனர். அப்போது வேகமாக நடப்பது, செருப்பு அணிவது கூடாது. காலை, மாலையில் சுற்றுவது நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சஷ்டி, பவுர்ணமியன்று வலம் வந்தால் விருப்பம் நிறைவேறும்.
விருப்பம் நிறைவேற; முருகனின் படைவீரர்களுக்கு தலைமை தளபதியாக இருந்தவர் வீரபாகு. திருச்செந்துார் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீரமகேந்திரர் இருவரும் காவல் தெய்வங்களாக உள்ளனர். திருச்செந்துாருக்கு வீரபாகு பட்டினம் என்றும் பெயருண்டு. அவரை பெருமைப்படுத்தும் விதமாக முதல் பூஜையை நடத்துகின்றனர். விருப்பம் நிறைவேற பிட்டு நைவேத்யம் செய்கின்றனர்.
கண்ணால் மலரும் பூக்கள்; முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியும், இடது புறம் தெய்வானையும் நின்றிருப்பர். வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பலம் மலரும் இருக்கும். முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையும் பார்ப்பதால் எப்போதும் அவை மலர்ந்திருக்கும். இந்த மலரைப் போலவே முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்.
உப்பும் பக்தியும்; முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் உடல்நலக் குறைவாக இருந்தார். அவர் உணவில் உப்பு சேர்க்க மாட்டார் என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்புச்சத்து குறைபாடு இருப்பதால் குணமாகும் வாய்ப்பு கிடையாது எனத் தெரிவித்தனர். படுக்கையில் கிடந்த சுவாமிகள், “முருகா! உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்” என்று சொல்லி சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்கள் வியக்கும் விதத்தில் குணமடைந்தார். எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது என்னும் சுவாமிகளின் வாக்கு உண்மையானது.