பதிவு செய்த நாள்
31
அக்
2012
11:10
மேட்டூர்: அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், மேட்டூரில் அன்னை காவிரி தீர்த்த யாத்திரை குழுவினர் சார்பில், சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது.அகில பாரத துறவியர் சங்கத்தின், "அன்னை காவிரி தீர்த்த யாத்திரை குழுவை சேர்ந்தவர்கள், கர்நாடக மாநிலம், குடகு மலையில் இருந்து, அக்டோபர், 20ம் தேதி காவிரி கரையோர பகுதிகளில் ஆற்றை தூய்மையாக வைத்து கொள்ளவும், மழை வளம் பெருக வேண்டியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த யாத்திரை குழுவினர், நேற்று மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தனர்.காவிரி ஆற்றின் கரையில் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். காவிரி அன்னை சிலைக்கு மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து, தீபராதனை காட்டி வழிபட்டனர்.காவிரி கரையோர பகுதியாக மொத்தம், 500 கி.மீ., பயணம் மேற்கொண்டு, வரும், 11ம் தேதி பூம்புகாரில் யாத்திரையை முடித்து கொள்கின்றனர்.இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.