தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 10:04
தஞ்சாவூர்,- உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம்(பிப்.8ம் தேதி) நடந்தது.
இந்நிலையில் , இன்று (ஏப்.6 தேதி) காலை பெரிய கோவிலில், கொடி மரத்துக்கு முன்பாக, சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை படிச்சட்டத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடை பெறுகிறது. தொடர்ந்து 2ம் நாளான நாளை (7ம் தேதி) பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது. 3ம் நாளான 8ம் தேதி பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது. 4ம் நாளான 9ம் தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 23ம் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.