பதிவு செய்த நாள்
01
நவ
2012
10:11
திருச்செங்கோடு: மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.திருச்செங்கோடு நகரில் உள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்பட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், பூச்சாட்டுதலுடன் ஐப்பசி திருவிழா துவங்கியது.தினமும் அதிகாலை புனித நீராடிய பெண்கள், கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பல பக்தர்கள் சிங்கம், புலி, கரடி வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். நாளை (2ம் தேதி) பொங்கல் பண்டிகை நடக்கிறது. அன்று, பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் சிறப்பு பூஜை செய்கின்றனர்.நவம்பர், 3ம் தேதி கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா நடக்கிறது. பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து, கம்பம் மற்றும் கும்பங்கள் சிறப்பு பூஜை செய்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஈரோடு சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.