பதிவு செய்த நாள்
01
நவ
2012
10:11
ஸ்ரீபெரும்புதூர்: ராமானுஜர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் குப்பை கழிவுகள் மிதப்பதால், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், ஆதிகேசவப் பெருமாள் சுவாமி கோவில் குளம் அமைந்துள்ளது. இது, பழமையான கோவில். ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜர் அவதரித்த தலம். வைணவத் தலங்களில், மிகவும் முக்கிய தலமான இங்கு, ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்து வருகிறார். திருக்குளம் இக்கோவிலில், பிரதிமாதம் திருவாதிரைத் திருவிழா, ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம் எதிராஜநாதவல்லி தாயாருக்கு, நவராத்திரி உற்சவம் என, பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. இக்கோவிலுக்கு வரும் பத்தர்களின் வசதிக்காக, கோவில் பின் புறம் திருக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு வந்தனர். திருக்குளத்தில் நீராடி வழிபட்டு செல்லும் முன், பக்தர்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சீர்கேடு: திருக்குளத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் ஏரியிலிருந்து, கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்நிலையில், குளத்தில் பொது மக்கள் துணி துவைக்கின்றனர். ஓட்டல் சாமான்களை, குளத்தில் கழுவுகின்றனர். இதனால், குளம் மாசு அடைந்துள்ளது. சுற்றுசுவர் சிதிலமடைந்துள்ளதால் தெருக்களில் உள்ள குப்பைகள் குளத்தில் விழுகின்றன. இது குறித்து, ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமிகள் கோவில் செயல் அலுவலர் கூறுகையில், "சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் திருக்குளம் சுற்றுச்சுவர் உயர்த்தி கட்டவும், சுற்றி கிரில்கேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.