பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
11:04
பந்தலூர்; பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் விஷூ விளக்கு திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி காலை நடைதிறப்பு, சுத்தி கலசபூஜை, மகா கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து செண்டை மேளம், கோலாட்டம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கல்லூரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் கோவிலுக்கு உண்டியல் மற்றும் பூமாலை கொண்டுவரும் ஊர்வலம் நடந்தது. வந்து கோலாட்டம், கோவிலுக்கு வாள் கொண்டு வந்து சேர்த்தல், அன்னதானம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, விளக்கு பூஜை, அன்னதானத்துடன், சுற்றுவட்டம் மற்றும் காணிக்கை சமர்ப்பித்தல், ஏலம் நடத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 2.30 மணிக்கு தேவி ஊர்வலமும், நீராடுதலும் நடந்தது. தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலை 5:00 மணிக்கு பகவதி அம்மனின் ஊர்வலமும், பக்தர்களுக்கு நல்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் விரதமிருந்து அம்மன் அருளுடன், சாமி ஆடிய குஞ்ஞன் முன்னிலையில் பக்தர்கள் அம்மனுக்கு பட்டு மற்றும் தாலி, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கி, அம்மன் அருளுடன் தேங்காய் உடைத்து, வாக்கு கேட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக அரிசி மற்றும் புனித நீர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி கன்வீனர் ஹரிதாஸ், தலைவர் ஸ்ரீதரன், நிர்வாகி ஹரி பிரசீந்த் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வயநாடன் செட்டி சமுதாய மக்கள், பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பங்களுடன் திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் பகல் இரவு திரளாக பங்கேற்றனர்.