பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
01:04
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு அரசனாகவும், திருமாலுக்குச் சேவை செய்யும் போது பெரிய திருவடியாகவும், தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள் நல்கும் விஷ்ணு அம்சமான கருட பகவானாகவும் அவர் விளங்குகிறார். வைணவத்தில் கருடனை பெரிய திருவடி என்று போற்றுகின்றனர். எம்பெருமான் எத்தனையோ வாகனங்களில் பவனி வந்தாலும், அவரை கருடவாகனத்தில் தரிசிப்பதே அதிக நன்மை தரும் புண்ணிய தரிசனம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கருட வாகன விஷ்ணு சிலை மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் இல்லை இந்தோனேஷியாவில். ஆம் இந்தோனேசியாவில் பாலியில் உள்ள கலாசார பூங்காவில் தான் இந்த கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது, செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 122 மீட்டர் உயரமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை அமைக்க சுமார் 28 ஆண்டுகள் ஆனாதாம்.
இதன் எடை எவ்வளவு தெரியுமா.. 4 ஆயிரம் டன். இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலை இதுதான் என்கின்றனர் வல்லுனர்கள். சுமார் ரூ.740 கோடி செலவில் உருவான இந்த சிலை அமைக்க 21 ஆயிரம் இரும்பு பாளங்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 400 அடி உயர கருட விஷ்ணு சிலையை தரிசிக்கவும், சுற்றுலாவிற்காகவும் இந்தோனேசியாவில் உள்ள பாலி கலாசார பூங்காவில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். பூங்கா தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.