பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
விருதுநகர்: சதுரகிரி மலையில், மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது, நடவடிக்கை எடுப்பதில், வனத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை சதுரகிரி வனப்பகுதியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி தினங்களில், தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்கள் வருகை தருவர். சித்தர்கள் வாழ்ந்த மலைப்பகுதி என்பதால், பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த மலையில் கோயிலுக்கு சொந்தமாக 63.76 ஏக்கர் மலைப்பாங்கான இடங்கள் உள்ளன.கோயில் நிர்வாகத்தில் உள்ள இவை,வனத்துறை கண்காணிப்பில் உள்ளது.இங்கு ஏராளமான மூலிகை மரங்கள், சந்தன மரங்கள் இருந்தன. இந்த மரங்களை மரம் வெட்டும் கும்பல் வெட்டி கடத்தியது, வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோயில் காவலர் ஜெயச்சந்திரன், அந்தர் என்ற சந்திரன் இருவரும் , சந்தன மகாலிங்கம் கோயில் அருகே உள்ள சந்தன மரத்தை வெட்டி மலையில் பதுக்கினர். சாப்டூர் வனச்சரகர் கருமலையான் தலைமையிலான வனத்துறையினர், இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், சந்தன மரம் வெட்டியது உறுதி செய்யப்பட்டது.அபராதம் கட்டிய இருவரையும், வனத்துறையினர் விடுவித்தனர். பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கும் வனத்துறையினரால், மரம் வெட்டி கடத்தும் கும்பல் அதிகரித்துள்ளன. இதனால் வனங்கள் அழியும் நிலை உள்ளது.