சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 01:05
மயிலாடுதுறை; சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் திருவிக்ரம நாராயண பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறார். மூலவர் பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இக்கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவிக்கிரம நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சணம், சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவிக்ரமநாராயண பெருமாள் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோயிலை வலம் வந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக 16-ம் தேதி தங்க கருட சேவையும், 19ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழா இன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.