பதிவு செய்த நாள்
13
மே
2024
04:05
பாலக்காடு; அய்யப்புரம் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது அய்யப்புரம் பெருமாள் திரௌபதி சமேத அர்ஜுன, கணபதி, வீரபத்ரர், கருட ஆழ்வார் சுவாமிகள் கோவில். இக்கோவிலில் ராமமூர்த்தி பட்டாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை மங்கல இசை வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், வசோர்த்தாரா, பூர்ணாஹூதி, வேதபாராயண சமாட்தி, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, கோவில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல் உப தேவ-தேவதைகளான மாரியம்மன், காளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், முனீஸ்வரன் கோவில்களிலும் கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10:30 மணிக்கு தசதரிசனம், மகா தீபாராதனை, ஆசிர்வாதம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, விசேஷ பூஜைகள் ஆகியவை நடந்தது, பின்னர் கல்பாத்தியில் இருந்து பாண்டிமேளம் என்று அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க யானை மீது உற்சவ மூர்த்தி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற்றது.