பதிவு செய்த நாள்
20
மே
2024
02:05
பொள்ளாச்சி; ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நம்பெருமாளை வழிபட்டனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, 1008 விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழாவையொட்டி, நம்பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் மகா அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாளுக்கு உகந்த துளசி, ஆரணி, தாமரை உள்ளிட்ட, 18 வகையான மலர்கள் கொண்டு சுவாமிக்கு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள், 1008 விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.