பதிவு செய்த நாள்
20
மே
2024
04:05
பல்லடம்; அப்டேட் செய்யப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கோவில்கள் வரலாற்று பிரசித்தி பெற்றவையாகும். தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு செல்லும் பக்தர்கள், கோவில் தரிசனம், சேவைகள், தங்குமிடம், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் அறிந்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது. தமிழக அரசு சார்பில், அறநிலையத்துறை இணையதளம் துவங்கப்பட்டு, இதில், அனைத்து கோவில்களின் வரலாறுகள், இருப்பிடம், நேரம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, மொபைல் எண்கள், முகவரி, இ மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவில் தரிசனம் செய்யவும், அறநிலையத் துறை சார்ந்த சேவைகளை பெறவும், பொதுமக்கள், அறநிலையத்துறை இணையதளத்தை நாடுகின்றனர். இவ்வாறு பல்வேறு சேவைகளை பெற விரும்பும் பொதுமக்கள், புதுப்பிக்கப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். கோவில்களின் தொடர்பு எண், செயல் அலுவலர்கள் உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் அலுவலக தொடர்பு எண்கள் உள்ளிட்டவை தவறாகவும், தொடர்பு எல்லைக்கு அப்பாலும் உள்ளன. அவ்வாறு தொடர்பு கொண்டாலும், பெரும்பாலான அலுவலகங்களில் அழைப்பை ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தனியார் இணையதளங்களை பயன்படுத்தி பக்தர்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால், அரசு இணையதள சேவையை பயன்படுத்துவதை சிறந்ததாக இருக்கும் என்பதால், அறநிலையத்துறை இணையதளத்தை புதுப்பிக்க வேண்டும். பக்தர்கள் எளிதில் தொடர்பு கொண்டு, அனைத்து சேவைகளையும் எளிதில் பெரும் வகையில், சேவைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.