பதிவு செய்த நாள்
21
மே
2024
03:05
பொன்னேரி; பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில், ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்து உள்ளது. இது, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அகத்தியர் வழிபட்ட, 163 ஸ்தலங்களில் ஒன்றாக இது சிறப்பு பெறுகிறது. கிழக்கு
நோக்கி இருக்கும் கோவிலில் லிங்க வடிவில் அகத்தீஸ்வரர், இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் ஐந்துமுகம் கொண்ட முருகபெருமான் சன்னிதிகள் உள்ளன. தெற்கு நோக்கி,ஆனந்தவல்லி தாயார் சன்னிதியும், வெளிப்புறத்தில் சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னிதிகளும் அமைந்து உள்ளன.
தினமும் பூஜை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவில் பாழடைந்து கிடக்கிறது. கோவில் சுவர்களில் மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. சுற்று சுவர்கள் சேதம் அடைந்தும், பெரும்பாலான இடங்கள் திறந்தவெளியாகவும் உள்ளன. உள்பிரகார மண்டபமும் சேதம் அடைந்து இருக்கிறது. கோவில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பழமையான இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக கோவில் பாழடைந்து இருக்கிறது. தொடர் கோரிக்கையின் பயனாகஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு பணிகளை முடித்து சென்று உள்ளனர். புனரமைப்பு மேற்கொள்வதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. தமிழக அரசு இந்த கோவிலை திருப்பணிக்கு பரிந்துரைத்து, திட்டமதிப்பீடு தயாரித்து, அதற்கான நிதியை ஒதுக்கி பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.