உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 05:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் அருகேயுள்ள உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று திருவிழா நடந்தது. அங்குள்ள கருப்பண சுவாமி கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. அதற்கு மாறாக நான்கரை அடி உயரத்தில் அரிவாள்களும், இருபுறமும் கல் தூண்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய பித்தளை மணிகள் ஏராளமாக உள்ளன. இவற்றையே பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு சுவாமி கும்பிட வருபவர்கள் கோயில் வளாகத்திலேயே தேங்காய், பழங்களை சுவாமிக்கு படைத்து அங்கேயே சாப்பிட்டு செல்வர். நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதி, சந்தனம், குங்குமத்தை கோயில் எல்லை தாண்டும்முன் அழித்துவிடுவர். அங்கு ஆண்டுக்கு ஒருமுறை கனி மாற்று திருவிழா நடைபெறும். அதனை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றதிலுள்ள கோயில் வீட்டில் இருந்து மூன்று ஆயிரம் வாழைப்பழங்கள், 500 மாம்பழங்கள், 500 பலா சுளைகள், மாலைகள், பூஜை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று உச்சி கருப்பண சுவாமி கோயிலில் படைத்தனர். தீபாராதனை முடிந்து கனிகள் மாற்றப்பட்டன.