பதிவு செய்த நாள்
25
மே
2024
11:05
திருப்பூர் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், கோவிந்தா… கோபாலா… கோஷம் முழங்க, திருப்பூர், வீரராகவ பெருமாள் தேர் பவனிவந்தது.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த 17ல் துவங்கி நடைபெற்றுவருகிறது. கடந்த 21ம் தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்றுமுன்தினம், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாள் கோவில் அருகே தேர் நிலையில், மாலை, 5:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கோவில் செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில், பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
வேத விற்பன்னர்கள் வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் பாடினர். நண்பர்கள் குழுவினரின் காவடி ஆட்டம், டிரம்ஸ், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மியாட்டம் முன்னே செல்ல, பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்தபடி நகர்ந்துவந்தது. தேரோடும் வீதியெங்கும் அலைகடலென திரண்ட பக்தர்கள், கோவிந்தா... கோபாலா... வைகுந்த வாசா... என கோஷமிட்டபடி, கரம்கூப்பி வணங்கினர்.
ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் வழியாக பவனிவந்த தேர், நிலை சேர்ந்தது. வாணவேடிக்கைகள், வானில் வர்ண ஜாலமிட்டன. பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர் பவனிவந்தபோது, தேருக்கு முன்பும், பின்பும், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், தேரோடும் வீதியில் கிடந்த குப்பைகளை உடனுக்குடன் துாய்மை செய்து அகற்றினர். பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் இணைந்து, நுாறு கிலோ கேசரி, புளியோதரை தயாரித்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதுதவிர, தேர் வலம் வந்த நான்கு வீதிகளிலும், பக்தர்களுக்கு மூலிகைப்பால், நீர்மோர் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவில், 9வது நாளான இன்று, குதிரை வாகன காட்சி, பரிவேட்டை உற்சவம் நடக்கிறது.